மோடி என்ற சொல்!

மோடி என்ற சொல்!
Published on

தமிழகத்தில் பாஜக அணியின் வெற்றிவாய்ப்ப்புகள், பிரச்சார வியூகங்கள் பற்றி அக்கட்சியின் தமிழகப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் உரையாடினோம். மோடி என்ற சொல் தங்கள் கூட்டணியில் உள்ள வேறுபட்ட கட்சியினரை ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வைக்கும் என்கிறார் அவர்.

பல்வேறு கொள்கைகள், நோக்கங்கள் கொண்ட பலகட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணி பாஜக தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. எப்படி ஒருங்கிணைந்து அவர்கள் வேலை செய்வார்கள்?

கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நான் களத்தில் இருந்து அனைத்தையும் கவனித்து வருகிறேன். எல்லா இடங்களிலும் தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சியினர் ஒருங்கிணைந்து பணிசெய்துவருகிறார்கள். ஒரு இடத்தில் கூட சின்ன பிரச்னைகூட வரவில்லை. அனைவரும் மோடி பிரதமராகவேண்டும் என்றுதான் பேசுகிறார்கள். மோடி என்ற சொல் அனைவரையும் ஒருங்கிணைத்து விட்டது.

ஆனால் புதுச்சேரியில் நிலைமை சரியில்லையே?

தமிழ்நாட்டு நிலவரம்தான் இது. புதுச்சேரி பற்றி அம்மாநிலப் பொறுப்பாளரிடம்தான் கேட்கவேண்டும்.

அதிமுகவில் ஜெயலலிதாதான் பிரதமராகவேண்டும் என்ற குரல் கேட்கிறது. தமிழக பாஜக அதை எப்படிப் பார்க்கிறது?

அந்த கட்சிக்காரர்கள்தான் அதைச் சொல்கிறார்கள். முதல்வர் அதுமாதிரி எந்த இடத்திலும் சொல்லவில்லையே..

தமிழ்நாட்டில் மோடி அலை  வீசுகிறதா?

நிச்சயமாக. மோடி என்ற ஒரு அலை நிச்சயம் இருக்கிறது. அப்படியானால் நீங்கள் தனியாகவே நின்றிருக்கலாமே?

மக்களிடம் மோடி அலை வீசுவது உண்மைதான். ஆனால் எங்கள் கட்சிக்கு சில இடங்களில் அமைப்புரீதியாக கடினமான சூழ்நிலை நிலவுகிறது. எனவேதான் கூட்டணி அமைத்திருக்கிறோம். எத்தனை சீட்களில் போட்டியிடுகிறோம் என்று பார்க்கவேண்டாம். தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் எல்லா இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்காக மோடி பிரதமராக வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

வடக்கே அத்வானி, ஜஸ்வந்த்சிங் என மூத்த தலைவர்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது உங்கள் கட்சியின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைப் பாதிக்கிறதே?

இப்போது பாஜகவுக்குள் ஒரு மாறுதல் நடக்கும் காலகட்டம். மோடி அவர்களுக்கு ஆதரவு பெருகி, இளையதலைமுறைக்கு வாய்ப்புகள் பெருகி உள்ளது. அதனால் சிலசமயம் மூத்த தலைவர்களுக்கு அவர்கள் விரும்பிய தொகுதிகளைப் பெறுவதில், அவர்கள் ஆதரவான தலைவர்களுக்கு தொகுதிகள் பெற்றுத்தருவதில் சிக்கல்கள் கசப்புகள் இருக்கலாம். ஆனால் அதனால் கட்சிக்குள் ஒருங்கிணைப்பு பாதிக்கப்படாது. இதெல்லாம் அரசியல் கட்சிகளில் சாதாரணமாக ஏற்படுவது. ஒரு கட்டத்துக்குப் பின்னர் அனைவரும் சமாதானமாகி விடுவார்கள்.

மத்தியில் எத்தனை இடங்கள் பாஜக கூட்டணி எதிர்பார்க்கிறது?

272க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டாயம் வெற்றி பெறுவோம்.

தமிழ்நாட்டில்?

எங்கள் தேசியத்தலைவர் 25 இடங்கள் எதிர்பார்ப்பதாகச் சொல்லிச் சென்றார். மீதி பதினைந்து இடங்கள் தோற்றுவிடுவீர்களா என்று நீங்கள் கேட்பீர்கள். எங்களைப்பொருத்தவரையில் 40 இடங்களிலும் வெற்றிபெறுவோம். அதற்காகத்தான் உழைக்கிறோம்.

ஏப்ரல், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com